ம்...
சந்தோஷமாக இருப்பதுதான்
எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
நீங்கள் ஏன்
சந்தோஷமாக இருக்க விரும்புகிறீர்கள்
என்று
ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வைப் போல
யாரும் என்னிடம்
கேள்விகேட்டுவிடவில்லை
ஆனாலும் நான்
சந்தோஷமாகவே இருக்க விரும்புகிறேன்.
ஏனெனில்
சந்தோஷமாயிருக்கும் நாட்களில்..
1.
போகும் வழியெல்லாம்
குயில் கூவிக்கொண்டிருக்கும்.
2.
தங்கரளிப்பூக்கள் காணக்கிடைக்கும்.
3.
எவரின் குழந்தையையோ
அனுமதியின்றி
கன்னம்கிள்ளிப் போகமுடியும்.
4.
கிரீச்சிட்டு நிற்கும்
நகரப் பேருந்தின் படிக்கட்டில்
பரவசமாய்
கால்பதித்தேற முடியும் முடியும்.
5.
புத்தகக் கடைகளில்
நின்று நிதானமாய்
வேடிக்கை பார்க்க முடியும்.
6.
குட்டியூண்டு டம்ப்ளரில்
தேனீர் தரும்
பரணிபவன் ஊழியருக்கு
ஒரு புன்னகையை
கொடுக்க முடியும்.
7.
வாழைப்பழத் தோலை
லாவகமாய்
அட்டைப்பெட்டியில்
வீசிப்பார்க்க முடியும்.
8.
மிஸ்டு கால்களுக்கும்
இனிய வணக்கத்துடன்
ரெஸ்பான்ஸ் செய்திட முடியும்.
9.
கால்சட்டையில் சிந்திய
சாம்பார் துளியை
வெறுப்பின்றி
துடைத்தெறிய முடியும்.
10.
அழுகுத்துணியுடன் நீர்நிறைந்த
பக்கெட் கைப்பிடியை
வலியின்றிச் சுமக்க முடியும்.
11.
அடிக்கடி தவறிவிழும் பேனாவை
சலித்துக்கொள்ளாமல்
குனிந்தெடுக்க முடியும்.
12.
உயரதிகாரிகளுக்கு
உண்மையாகவே
பொறுமை காக்க முடியும்.
13.
சூப்பர் சிங்கர் ராகினியுடன்
கூட சேர்ந்து பாடமுடியும்.
14.
அம்மா வைத்துவிட்டுப் போன
குழம்புக்கு ஏதுவாய்
தோசை வார்த்துக்கொள்ள முடியும்.
15.
கவிதைகள் அடங்கிய
நண்பனின் கடிதத்தை
விசிறிவிட்டுப் போன
போஸ்ட்மேனை
திட்டாமல் குனிய முடியும்.
16.
ஒன்டூஒன் அக்காகொடுத்த
ஃபாரின் சாக்லெட்டை
பேப்பர் ஒட்டாமல்
சாப்பிடமுடியும்.
17.
மெட்ரோ ரயில் வரிசையில்
தாளம் போட்டபடி
நிற்க முடியும்.
18.
சண்டைக்கார உறவினரின்
உடல் நலம்தேற
உள்ளபடியே பிரார்த்திக்க முடியும்.
19.
அடிப்படை புரிதல் இல்லாத
பேராசிரியர்களை
அவர்களின்
வயதுக்காக மன்னிக்க முடியும்.
20.
பார்த்தவுடன் டூவிடும் குழந்தையிடம்
பதிலுக்கு டூவிடாமல்
வாரியணைத்துக் கொஞ்சமுடியும்.
21.
முறைத்து நிற்கும் வாட்ச்மேனிடம்
கோவைத் தமிழில் பேசி
உருகச் செய்ய முடியும்.
22.
உள்குத்திட்டுச் சிரிக்கும்
ஆள்தோட்ட பூபதிகளை
தோள்தட்டிச் செல்ல முடியும்.
23.
வறண்டு கிடக்கும்
போஸ்ட் ஆபீஸ் பசையை
எச்சில் தொட்டு
என்வலப் ஒட்ட முடியும்.
24.
காசுதர முடியாவிட்டாலும்
உதவி இயக்குநர் நண்பனுக்கு
ஆறுதலாய்
நாலுவார்த்தை சொல்ல முடியும்.
25.
பாவமன்னிப்பு கேட்பதுபோல
மொட்டை மாடியில்
வானம் பார்த்து
உட்காரமுடியும்.
26.
யோசனை தூரம் என்றால்
எவ்வளவு என்று
யோசித்துப்பார்க்க முடியும்.
27.
மனதைத் தொட்ட
விளம்பரத்தைப் பற்றி
நண்பர்களுடன்
சிலாகிக்க முடியும்.
28.
மூன்றுவரிக் கவிதைகளாயினும்
கிறுக்கல் இல்லாமல்
எழுதிவைக்க முடியும்.
29.
மேலும்
சாலையோரம் செல்கையில்
மேல்விழும் பூவினத்தை
வெகு வாஞ்சையாய்
தட்டிவிட முடியும்.
ஆகவே
தயவுசெய்து என்னை
சந்தோஷமாக வைத்திருங்கள்.
மேலும் என்னை எப்படி
சந்தோஷமாக வைத்திருக்கலாமென்ற
இருபத்தியொன்பது மற்றும்
அதற்கு மேற்பட்ட வழிகளை
அடுத்த கவிதையில்
பட்டியலிடுகிறேன்
ஓ.கே...!?
இத்தனை மகிழ்வான தருணங்களா!!!
ReplyDeleteநல்ல கவிதை கவின்!
(நேரில் பார்த்ததை விட புகைப்படத்தில் டெர்ரராக இருக்கிறீர்கள்!!)