kavin

kavin

Friday, December 24, 2010

மன்னார் மதனகோபால் அம்புஜாஸ்ரீ- கமல்ஹாசனின் visual treat.

சுவாரஸ்யமும் குளுமையுமாய் முழுக்க கமலின் ஆளுமையைத் தூவிச்செல்லும் சுவையின்பம். முதல் பாதியில் கமலின் வசீகரத்தில் ஆழ்ந்தும் மறுபாதியில் அவரின் humour techniques -ல் கலகலத்தும் லயிக்கிறது அரங்கம்.
மின்சாரக்கனவுக்கும் இதற்கும் துளியும் தொடர்பில்லை. அந்த flashback பாடல் உட்பட படத்தில் நுட்பமாக நிறையப் புத்தம் புதிய முயற்சிகள்{பேட்டிகளில் கமல் பிரயோகிப்பதைப் போல "கெட்டிக்காரத்தனங்கள்"} கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும்.தேர்ந்த கலைஞனால் மட்டுமே இது சாத்தியம் என்பது புலனாகிறது.
மூன்று இடங்களில் பறவைகள் பறப்பது வருகிறது, அவை உணர்த்தும் உணர்வுகளோ கோடிப் பக்கங்களில் பதியலாம்.தகிடுதத்தம் செய் பாடலுக்காக அரங்கம் காத்திருந்து அராவரிப்பது கண்கூடு. போதிக்கப்பட்ட அறங்களை மறுவாசிப்பு செய்யும் நவீன பிரதி அப்பாடல்.
"என்னைக் கேட்டிருந்தா நான் கொடுத்திருப்பேனே" என்று திரிஷா சொல்வது logic- ல் கொஞ்சம் தாமதம். அந்த விஷயதிற்கு திரைக்கதையில் முன்னமே ஒரு காட்சியோ,வசனமோ ஒரு convincing point கொடுக்காமல் விட்டது மட்டும் சுட்டிக்காட்டலாம்.heroism - kamal கையில் போகும்போது ஒரு uniqueness இருக்கிறது. ரசிக்க முடிகிறது. கமல் ரசிகர்கள் , தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட மற்றுமொரு கமல்ஹாசன் திருவிழா. உலக நாயகனிடமிருந்து ஒரு கலைத் தெறிப்பு.

Tuesday, September 7, 2010

இரும்புக்கை மாயாவியும் இருபத்தியொன்பது சிப்பாய்களும்

ம்...
சந்தோஷமாக இருப்பதுதான்
எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
நீங்கள் ஏன்
சந்தோஷமாக இருக்க விரும்புகிறீர்கள்
என்று
ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வைப் போல
யாரும் என்னிடம்
கேள்விகேட்டுவிடவில்லை
ஆனாலும் நான்
சந்தோஷமாகவே இருக்க விரும்புகிறேன்.

ஏனெனில்
சந்தோஷமாயிருக்கும் நாட்களில்..

1.
போகும் வழியெல்லாம்
குயில் கூவிக்கொண்டிருக்கும்.

2.
தங்கரளிப்பூக்கள் காணக்கிடைக்கும்.

3.
எவரின் குழந்தையையோ
அனுமதியின்றி
கன்னம்கிள்ளிப் போகமுடியும்.

4.
கிரீச்சிட்டு நிற்கும்
நகரப் பேருந்தின் படிக்கட்டில்
பரவசமாய்
கால்பதித்தேற முடியும் முடியும்.

5.
புத்தகக் கடைகளில்
நின்று நிதானமாய்
வேடிக்கை பார்க்க முடியும்.

6.
குட்டியூண்டு டம்ப்ளரில்
தேனீர் தரும்
பரணிபவன் ஊழியருக்கு
ஒரு புன்னகையை
கொடுக்க முடியும்.

7.
வாழைப்பழத் தோலை
லாவகமாய்
அட்டைப்பெட்டியில்
வீசிப்பார்க்க முடியும்.

8.
மிஸ்டு கால்களுக்கும்
இனிய வணக்கத்துடன்
ரெஸ்பான்ஸ் செய்திட முடியும்.

9.
கால்சட்டையில் சிந்திய
சாம்பார் துளியை
வெறுப்பின்றி
துடைத்தெறிய முடியும்.

10.
அழுகுத்துணியுடன் நீர்நிறைந்த
பக்கெட் கைப்பிடியை
வலியின்றிச் சுமக்க முடியும்.

11.
அடிக்கடி தவறிவிழும் பேனாவை
சலித்துக்கொள்ளாமல்
குனிந்தெடுக்க முடியும்.

12.
உயரதிகாரிகளுக்கு
உண்மையாகவே
பொறுமை காக்க முடியும்.

13.
சூப்பர் சிங்கர் ராகினியுடன்
கூட சேர்ந்து பாடமுடியும்.

14.
அம்மா வைத்துவிட்டுப் போன
குழம்புக்கு ஏதுவாய்
தோசை வார்த்துக்கொள்ள முடியும்.

15.
கவிதைகள் அடங்கிய
நண்பனின் கடிதத்தை
விசிறிவிட்டுப் போன
போஸ்ட்மேனை
திட்டாமல் குனிய முடியும்.

16.
ஒன்டூஒன் அக்காகொடுத்த
ஃபாரின் சாக்லெட்டை
பேப்பர் ஒட்டாமல்
சாப்பிடமுடியும்.

17.
மெட்ரோ ரயில் வரிசையில்
தாளம் போட்டபடி
நிற்க முடியும்.

18.
சண்டைக்கார உறவினரின்
உடல் நலம்தேற
உள்ளபடியே பிரார்த்திக்க முடியும்.

19.
அடிப்படை புரிதல் இல்லாத
பேராசிரியர்களை
அவர்களின்
வயதுக்காக மன்னிக்க முடியும்.

20.
பார்த்தவுடன் டூவிடும் குழந்தையிடம்
பதிலுக்கு டூவிடாமல்
வாரியணைத்துக் கொஞ்சமுடியும்.

21.
முறைத்து நிற்கும் வாட்ச்மேனிடம்
கோவைத் தமிழில் பேசி
உருகச் செய்ய முடியும்.

22.
உள்குத்திட்டுச் சிரிக்கும்
ஆள்தோட்ட பூபதிகளை
தோள்தட்டிச் செல்ல முடியும்.

23.
வறண்டு கிடக்கும்
போஸ்ட் ஆபீஸ் பசையை
எச்சில் தொட்டு
என்வலப் ஒட்ட முடியும்.

24.
காசுதர முடியாவிட்டாலும்
உதவி இயக்குநர் நண்பனுக்கு
ஆறுதலாய்
நாலுவார்த்தை சொல்ல முடியும்.

25.
பாவமன்னிப்பு கேட்பதுபோல
மொட்டை மாடியில்
வானம் பார்த்து
உட்காரமுடியும்.

26.
யோசனை தூரம் என்றால்
எவ்வளவு என்று
யோசித்துப்பார்க்க முடியும்.

27.
மனதைத் தொட்ட
விளம்பரத்தைப் பற்றி
நண்பர்களுடன்
சிலாகிக்க முடியும்.

28.
மூன்றுவரிக் கவிதைகளாயினும்
கிறுக்கல் இல்லாமல்
எழுதிவைக்க முடியும்.

29.
மேலும்
சாலையோரம் செல்கையில்
மேல்விழும் பூவினத்தை
வெகு வாஞ்சையாய்
தட்டிவிட முடியும்.

ஆகவே
தயவுசெய்து என்னை
சந்தோஷமாக வைத்திருங்கள்.
மேலும் என்னை எப்படி
சந்தோஷமாக வைத்திருக்கலாமென்ற
இருபத்தியொன்பது மற்றும்
அதற்கு மேற்பட்ட வழிகளை
அடுத்த கவிதையில்
பட்டியலிடுகிறேன்
ஓ.கே...!?

Friday, September 3, 2010

ஜிகினா சுந்தரி

எத்துணை நிம்மதி?
இன்று தனிச்சிறப்பான
எந்த ஒரு செயலையும்
செய்யவில்லை.
-
தேவதேவன்.
................................................................................................

என் எழுத்திற்கென்று ஒரு சத்தியம் இருக்குமாயின்
அதுவே எனக்கு நிம்மதியும் ஆகச்சிறந்த விருதுமாகும்.
-
கவின்.
..................................................................................................
1.

கொட்டும்
மழையில்
படுத்துக்கிடந்தேன்
ஒரு
நாயைப் போலவும்
பிறகு
கரையும்
ஒரு
காகிதப் படகெனவும்
பின்னர்
ஒரு
உறிஞ்சப்படும்
குவளையின்
மிதந்தலையும்
தேநீராகவும்.
....................................................................................
2.

கிரிக்கெட் விளையாடத்தான்
புறப்பட்டோம்
மைதானம் முழுக்க
காலியாயிருந்ததால்
ஃபுட்பால் விளையாடத் துவங்கிவிட்டோம்.
............................................................................................
3.

நீ
நான்
என
என்
நான்
என
உன்
நான்.
............................................................................
4.

முகமூடிகள் விற்பவனின்
நடை வேகத்தை
ஒத்திருக்கிறது
இவ்வரிகளை எழுதும் கணங்கள்.
........................................................................
5.
உன் பெயர்
என்ன என்றேன்
ஜிகினா சுந்தரி
என்றாள்.
சுந்தரி உன் பெயர்
ஜிகினா?
என்றேன்
பதிலாகவோ
பதிலற்றவளாகவோ
ஜிகினா சிரித்துக்கொண்டது.
............................................................................
6.

புதைமணலுக்குள்
போய்க்கொண்டிருக்கிறது
என் பெயர்
கடைசி எழுத்து
மூழ்கிடும் முன்னர்
ஒரே ஒரு முறையும்
உச்சரித்து விடாதீர்கள்.
..................................................................
7.

என்னை என்னால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை.
..........................................................................
8.

சமூகப் பிரக்ஞை
வேண்டுமென்றான் ஒருவன்
பிரக்ஞை என்றால்
என்னவென்று தெறியாமலேயே
ஆமாம் என்பது போல
தலையாட்டி வைத்தேன்.
.....................................................................
9.

தீயைச் சுவைக்க
அலைகிறது மனம்
ஏதோ
முன்பின்
சுவைத்திருப்பது போல.
............................................................
10.

ஒரு
சொல்லை
பி
டி
த்

டி
பறக்க முடிகிறது.
......................................................................................
11.

'
தீம்தரிகிட தீம்தரிகிட '
என்றான் நன்பண் திடீரென்று.
திரும்பிப் பார்த்தேன், நல்லவேளையாய்
ஈட்டிக்காரன் எவனும்
வரவில்லை.
...............................................................................
12.

கிடைத்த எல்லாவற்றையும்
உடைத்தெறிந்தேன்
பிறகொருனாள்
என்னயே நான்
உடைத்துக்கொண்டேன்.
...........................................................................
13.

தூரிகையை
கன்னத்தில்
வைத்துப் பார்த்தேன்
அந்தக் குளிர்ச்சி
எந்த வர்ணம்?
...............................................................
14.

ம்
பு
க்
கு
றி
யாய்
கூரை வீடு
நிலவைப் பார்க்கச் சொல்லும்.
....................................................................
15.

முல்லை மலர்
அறியுமா
பாரியின் தேரை
அதற்கு முன்?
.....................................................................................
16

மௌனம் தின்னும் மௌனம்
யாரும் பார்த்தறியாக் குரூரம்
உயிர் போக
கூக்குரலிட
மௌனம்
மேலும் மௌனமானது

ரு

மரணமே...
...................................................................................
17.

பூஜ்யம்
ஒரு
பிரம்மாண்ட
பூஜ்யம்.
.....................................................................................
18.

தயவற்று
என்னைக் கொல்
தயை செய்து.
.....................................................................................
19.

கடித்த கொசுவை
அடிக்கத் தூக்கிய
கையிலும் கடித்தன
சில கொசுக்கள்.
.....................................................................................
20.

யாரங்கே
நீர் இல்லாவிட்டால்
பரவாயில்லை
கொஞ்சம்
விஷமாவது கொண்டு வா.
.....................................................................................
21.

கிணற்றுக்குள்
எட்டிப் பார்த்தேன்
ஒரு
காகம்
தெரிந்தது.
.....................................................................................
22.

மனதில் இருப்பதை
இருப்பது போலவே
யாரிடமும்
சொல்லமுடியவில்லை
அப்படி ஏன் முடியவில்லை
என்பதையும் சேர்த்துதான்.
.....................................................................................
23.

தூக்கத்தில்
சிரிப்பதை
வியாதியென்கிறார்கள்
சிரிப்புதான் வருகிறது.
.....................................................................................
24.

விதிமுறைகள் புரிவதற்குள்
ஆட்டநேரம் முடிந்துவிடுவது
அழகான விதிமுறை.
.....................................................................................
25.

மனசு
முழுவதும்
நிறைந்திருக்கிறது
வெறுமை.
.....................................................................................
26.

அதிகாலைப் பேருந்து நிறுத்தம்
நின்றிருந்த மனிதர்களின்
தலையிருக்க வேண்டிய இடத்தில்
கடிகாரங்கள் இருக்கின்றன.
.....................................................................................
27.

கல்லறை மேல்
அமரும் பறவைகள்
கனவுகளை எடுத்து
பறந்து போகின்றன
ஆகாயத்திற்கு அப்பால்.
.....................................................................................
28.

இலவசமாய் வந்த ராசிபலன்
இரவல் போய்விட்டது
ஓசியில் வாங்கியவன்
ஒய்யாரமாய் நடக்கிறான்
காசு கொடுத்து வாங்கியவன்
பாவங்களுடன் திரிகிறேன்
கொடுத்த புத்தகத்தை
திருப்பி வாங்கும்
பரிகாரம் தெரியாமல்.
.....................................................................................
29.

எல்லாவற்றிற்கும்
எல்லாமும்
தொலைந்து போயிற்று
அதனதன் பெயர்களைத்தவிர.
.....................................................................................
30.

ஒரு வானம் வைத்திருக்கிறேன்
ஒரு கோடி சிறகுகளும் வைத்திருக்கிறேன்.
.....................................................................................
31.

ஒரு கெட்டவார்த்தையை
ஆச்சர்ய வார்த்தையாக
மாற்றிப்பயன்படுத்தும் திறமை
எம் தமிழருக்குக் கைவந்திருக்கிறது
வாழிய நீ பராசக்தி.
..........................................................................................................................................................................
32.

வெறுமையின் மாலை.
தனிமையில் இழைந்திருக்கும்
ஒலிக்கபடாத இசைத்தகடு.
ஒரு தேநீர்.
சில அச்சுத் தாள்கள்.
அனிச்சையான உச்சரிப்புகள்.
பிடிவாததத்தில்
ஆழ்ந்து கூவும் குயில்.
இவையும் இன்னமும் இன்னபிறவும்
எல்லாம் கடந்த பின் கவனித்தேன்
தவறிய அழைப்பில் யாரோ.
.....................................................................................
33.

என்மீது ரயிலொன்று
ஏறிப்போனால்
என்னவாகுமென்று
யோசிற்ற்துப் பார்த்தேன்
நன்றாக இருந்தது.
.....................................................................................
34.

நடுநிசியில்
நான் அனுப்பும்
கவிதைக் குறுந்தகவல்கள்
அதிகாலையில் படிப்பவர்க்கு
கலவரமூட்டவும் செய்யலாம்.
..........................................................................................................................................................................
35.

எங்கோ நீர்வழியும்
ஓசையின் உள்ளுணர்வில்
விழித்துக் கொண்டேன்
நியான் வெளிச்சத்தில்
ஒரு பெரிய மரம்
என்னைப் பார்த்துக் கொண்டு
நி
ற்
கி

து
ஜன்னளுக்கு வெளியே.
.....................................................................................
36.

நீண்ட நேரமாய்
மனதுக்கு ஏதோ
வேண்டும் போலிருக்கிறது
ஆனால் என்னவென்று தெரியவில்லை.
.....................................................................................
37.

எங்கள் வீட்டில் அந்த மிருகம்
நுழைந்தேவிட்ட போது
அலறக்கூட இயலாத
வழக்கத்திலிருந்தோம்
மாறாக
தயாராகிக்கொண்டிருக்கும் தேநீருக்கு
சர்க்கரை அளவைப்பற்றி
சொல்வதிலேயே
முனைப்பாயிருந்தோம்.
.....................................................................................
38.

பூவைப் பறிப்பதற்க்கு
முந்தய கணத்தை
யோசித்துப் பார்த்தேன்
யோசிக்க மட்டுமே முடிந்தது
முந்தய கணம்
முந்தய கணமாகவே இருந்தது.
.....................................................................................
39.

என் மீது யாரோ
பூக்களை வாரியிறைப்பதைப் போல
மழை பொழிந்துகொண்டிருந்தது.
.....................................................................................
40.

பையைக் காலியாக்கிவிடாமல்
பார்த்துக்கொள்கின்றன
யாருமே வாங்காத நாலணாக்கள்.
.....................................................................................
41.

உருவமற்ற மனதின்மேல்
நடனமாடும் சொற்கள்
வலியென்னவோ நிஜம்தான்.
.....................................................................................
42.
வெரியும் காட்டுக்குள்
யாழிசைத்துக் காத்திருக்கிறேன்.
.....................................................................................
43.
வெறித்துப் பார்த்து
திகிலூட்டும் பூனைகளுக்கு
குலைத்துச் சலிக்கும்
நடுநிசிநாய்கள்
எவ்வளவோ பரவாயில்லை.
.....................................................................................
44.
யார்க்கர் பற்றி
ஒரு கவிதை எழுதவேண்டும்
எவ்வளவு
துல்லியமாக வருமென்று
தெரியாததால்
இப்போதைக்கு ஒத்திப்போட்டிருக்கிறேன்.
.....................................................................................
45.
அதிதிக்கு கடல் போல எனக்கு மழை.
.....................................................................................
46.
ஒரு நிலாக்குளியல் போடலாம் வாருங்கள்.
.....................................................................................
47.
நிலாப் பார்ப்பதை ஆச்சர்யமாய்ப் பார்ர்க்கிறார்கள்.
.....................................................................................
48.
மந்திரம் ஒன்றை
கற்க வேண்டும்
நானே தொலைந்துபோக.
.....................................................................................
49.
தொடுத்துக்கொண்டிருக்கும்
பேரழுகையோடு வெறித்திருந்தேன்
கையில் பலூனோடு
மணற்கற்களை மிதித்தோடுகிறாள் அதிதி.
.....................................................................................
50.
சொல்ல ஒன்றுமில்லை
அல்லது
சொல்ல இயலவில்லை.
.....................................................................................
51.
கனமான மனதிலிருந்து
மெல்லியதாய்
வழிகிறது உயிர்.
குளிர்காற்று பற்றி
யோசிக்க முடியவில்லை.
அனிச்சை செயலாயும்
எவ்விரல்களும் உயரவில்லை.
.....................................................................................
52.
எதிர்பாராத திருப்பங்களில்
வந்து சேர்கிற
நம்பிக்கை துரோகங்கள்
என் பிழையின்றி
யார் பிழையும் இல்லை.
.....................................................................................
53.
கூரிய சிறகுகளுடைய சொற்கள்
வெகுநேரமாய்
என்னைப் பின்தொடர்கின்றன.
எதேனும் ஒரு கணத்தில்
சட்டென்று நின்று திரும்பி
ஒற்றைப் பார்வையில்
அத்தனை சொற்களையும்
மண்ணுக்குள்ளோ
மலைக்குள்ளோ
புதைத்துவிடலாமென்று பார்ர்க்கிறேன்.
.....................................................................................
54.
தாங்கிக்கொள்ளவே முடியாமல்
சில விஷயங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
சொல்லியோ எழுதியோ அழுதுதீர்த்தோ
எப்படியும் கரைவதில்லை அவை.
எவரின் தோல்சாய்தலிலும்
மறக்காமல் தன்னிஷ்டக் கோடுகளை
வரைந்தழித்துப் பார்த்துக் கொள்கின்றன.
கூடவே உணர்வில்லாத புன்னகையொன்று
ஒட்டினாற்போல வந்துவிடுகிறது.
மெல்லிய காற்றில் வீழுமிலையாய்
தொடுத்துக்கொண்டிருந்தாலும்
அசையும் மனசின் கிளையொன்றில்
ஆழமாய்ப் பதிந்திருப்பதை உணரமுடிகிறது
அவற்றின் நீண்ட நாளைய இருப்பில்.
.....................................................................................
55.
படபடக்கும் காகிதங்கள்
எழுதச் சொல்லும் கவிதை
எதுவென்று தெரியாமல்
பேனாவை மூடி
அவற்றின்மேல் வைக்கிறேன்
இப்போதைக்கு.
.....................................................................................
56.
ரோஜாவின் முகவரி
வனம்
வனத்தின் முகவரி
ரோஜா
ஒன்றின் முகவரி ஒன்று
என்றாகிப்போன ஒன்று.
.....................................................................................
57.
அலுவலகத்திலிருந்து
வீட்டுக்குப் போகும் வழியில்
தினமும்
மின்மயானத்தை சுற்றிப்போகிறேன்
அமைதி
மயான அமைதி.
.....................................................................................
58.
ஒரு பின்குறிப்பைபோல
'
செய்திகள் வாசிப்ப்து...' என
கம்பிவைத்த ட்ரான்ஸ்சிஸ்டர் குரல்
கரகரத்துக் கொண்டிருந்தபோது
மழையின் துவக்கம் நன்கு தெரிந்தது.

புஷ்பா தியேட்டர் ரயிலடியின்
சுரங்கப்பாதை வழியாக
நடந்து வந்துகொண்டிருந்தேன்.

"
யாரையும் நம்பக்கூடாது
ஏன்
என்னயே நான் நம்பறதில்ல"
என்றது ஒரு பழுப்பு வேட்டி
பீடி வலித்துக்கொண்டே.

யோசனையுமின்றி
"
ஆமாமாம்" என்றது
பீடிவலிக்கும் மற்றொரு பழுப்பு வேட்டி.

கடந்து வந்துவிட்ட பிறகும்
இருபழுப்பு வேட்டிகளும்
அந்த வசனத்தையே
ஓராயுரம் முறை
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்
என்னுள்
கரகரப்பின் பின்குறிப்பில்.
59.
நகுலனைப்பற்றி
அதிதிக்கு
சொல்லியாயிற்று.
இனி
அதிதியைப்பற்றி
நகுலனுக்கு
எப்படிச் சொல்வது.?

60.
பரிசோதனைகளின் உச்சத்தில்
பரஸ்பரம் எலிகளாகிப்போனோம்.
.....................................................................................
61.
வெகுநேரக் காத்திருப்பை
கவனித்த மீன்கள்
என்னுடையது
கடலுக்கான தூண்டிலென நினைத்து
அருகில் வரவே மறுத்துவிட்டன.
.....................................................................................
62.
மயில்போல
அபிநயம்
செய்துகாட்டிய
ராஜேஸ்வரிக்கு
தெரியப்படுத்த வேண்டும் போலிருக்கிறது
அவள் போன பிறகு
நிஜமாகவே
மழை வந்தது பற்றி.
.....................................................................................
63.
தேநீர்ப்பாயில் கண்ணீர் நிரம்பிய கோப்பை.
எடுத்துக்குடிக்கும் முந்தய கணம்வரை
வாய்க்குள்ளேயே நடனமாடுவது
எவருடய நாக்குகளோ.

யாருக்கும் தெரியாமல் எடிப்பார்க்கிற
கனவுகளின் கடத்தின் அகோர வாசிப்பு.
செய்வினை செயப்பாட்டுவினை தாண்டி
ஊழ்வினை வரைக்கும் இழுத்துப்போகிறது.

ஆதி,இருப்பு போன்ற பேச்சுவழக்கல்லாதசொற்கல்
கால்மேல் கால் போட்டுக்கொண்டு
எனது 'நான்' 'நீ' கவிதைகளை
டாப்-டென் வரிசைப்படுத்துகிறது.

சொல்லவந்ததை சொல்லிமுடித்தபிறகும்
மீதமிருக்கும் வினாடிகளுக்காக ஏதேனும் கதைக்கும்
ஒருரூபாய் காயின்பாக்ஸ் காரனைப் போல
கனவின் நகலைப்பிரதி எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

கடந்துகொண்டிருக்கிறது ஒரு
குளிர்புகைக்காலம்..
.....................................................................................
64.
திறந்த நீரிலிருந்து
வந்த நுரை காணாமல் போய்
கொஞ்ச நேரத்தில்
நான்
அங்கிருந்தேன்
இங்கும் இருந்தேன்.
.....................................................................................
65.
முத்தங்கள் தீர்ந்த ஒரு
வினாடியில்
அந்தக் குழந்தையைப் பார்த்தேன்
முத்தங்கள் நிறைந்த ஒரு கூடையை
எனக்கது பரிசளித்தபோதுதான்
குழந்தைகள் முத்தங்களின் கடவுள்கள்
என்று தோன்றிற்று.
ஆனாலும் அந்தக் குழந்தை
ஒரு கவிதை கேட்டு
அடம்பிடிக்குமென்று நான்
நினைத்துக்கூட பார்க்கவில்லை.
.....................................................................................
66.
யாருமற்ற பொழுதில்
எல்லோருமாகப் பார்த்து
யாருமே இல்லாமல்
நானுமற்றுப் போனேன்.
.....................................................................................
67.
நகரம்
மாநகரமானது
மழை
.....................................................................................
68.
அந்த போலீஸ்காரர்
கையிலிருந்த கம்பு
ஒரு புல்லாங்குழல்
போலிருந்தது.
.....................................................................................
69.
காதலிகளின் அருகாமையில்
திறக்கப்படும்
ஆண்களின் பர்ஸ்களுக்கென்று
ஒரு லாவகம் இருக்கிறது.
.....................................................................................
70.
கல்யாண்ஜிக்கு என்னை
பிடிக்குமா
என்று தெரியாது
எனக்கு கல்யாண்ஜியை
பிடிக்கும் என்பதே
போதுமானதாயிருக்கிறது.
அவரைப்போலவே
ஒரு கவிதை எழுதிப்பார்க்கவும்
பின் அதனை பத்திரமாய்
பத்திரப்படுத்தவும்.
.....................................................................................
71.
எல்லா திவ்யாக்களுக்கும்
கன்னத்தில்
மச்சம் இருக்கிறது.
.....................................................................................
72.
உங்களைப் போலவே
இருக்கின்றன
என் கவிதைகள்
எம்முறையும்
என் கவிதைகள் போல
நீங்கள் இல்லவே இல்லை.
.....................................................................................

73.............................................................

யாருமற்ற பொழுதில்
எல்லோருமாகப் பார்த்து
யாருமே இல்லாமல்
நானுமற்றுப்போனேன்.

74.............................................................

சுயமற்ற வேளையில்
ஒரு அகாயம் திறந்திற்று
என் தலைக்குள்.

75...............................................................

வெளியை பிரவேசிக்க
ஆசைப்பட்டு
இருந்த வானத்தை
தொலைத்தவன் நான்.

76.............................................................

முத்தங்கள் தீர்ந்த

ஒரு வினாடியில் தான்
அந்தக்குழந்தையைப் பார்த்தேன்.

முத்தங்கள் நிறைந்த

ஒரு மலர்க்கூடையை
எனக்கது பரிசளித்த போதுதான்

குழந்தைகள்
முத்தங்களின் கடவுள்கள்
என்று தோன்றிற்று.
அனாலும் அந்தக் குழந்தை
ஒரு கவிதை கேட்டு
அடம் பிடிக்குமென்று
நான் நினைத்துக் கூட
பார்க்கவில்லை.

77.................................................................

நீரிலிருந்து வந்த நுரை
காணாமல் போய்
கொஞ்ச நேரத்தில் நான்

அங்குமிருந்தேன்
இங்குமிருந்தேன்.

78....................................................................

வாட்டர் ஃபில்டரிலிருந்து கசிந்த
ஒரு சொட்டு
தண்ணீரின் கணம்
நெஞ்சுக்குள் விழுந்து
கொண்டுவந்து கொடுத்தது
நாய்கள் எதுவும் குரைக்காத
ஒரு நிசியை.

79............................................................................

கனவில் வந்த
நிறமற்ற ரயில்
சத்தம் போடாமலேயே
என் மீது
ஏறிப்போனது.
பின்னொரு
கனவில் வந்த
வானத்தில்
நிறைய நிலாக்கள் இருந்தன.

80.............................................................................

கண்ணாம்பூச்சி சுவாரஸ்யத்தில்
உள்நுழைந்த போதுதான்
தெரிந்தது
எனக்குள்
யார்யாரோ ஒளிந்திருப்பது.

81...............................................................................

இந்தமுறை
கிராமத்துக்குப் போனபோது
பெரியாத்தாவிடமிருந்து
ஊதாங்குழலை வாங்கி
முயற்சித்த போது
ஹூக்கா பற்றி
ஞாபகம் வரவேயில்லை.

.82.......................................................................

சுத்தமாயிருந்த கோவில் வாசலை
மேலும் மேலும் பெருக்கி
சுத்தம் செய்துகொண்டிருந்தாள்
ஒரு பைத்தியம்.
அப்போதுதான்
பஞ்சுமிட்டாய் கேட்டு
கதறியழுத குழந்தையை
தரதரவென
இழுத்துச்செல்கிறாள் ஒருத்தி.

83.........................................................................

சிதிலமடைந்த யானைச் சிற்பம்
காற்றில் தன்
தும்பிக்கையை
தேடிக்கொண்டிருக்கிறது.

84.................................................................

ஈசலைப் பிடிக்க
காத்திருக்கும் பல்லியை
உற்றுப் பார்த்தேன்.
கொஞ்ச நேரம்
அதுவும் என்னை
உற்றுப்பார்த்தது.

.85................................................

மின்னலில் ஒளிரும்
மதிற்சுவர் கண்ணாடிகள்
அறிந்திருக்குமா
தன்
இடம் பொருள் காரணத்தை?

..86.................................................

ஒரு பைத்தியக்காரன் போல
கவிதையெழுதுகிறேன்
என்றெழுதும்போது
உண்மையாகவே
கொஞ்சம் பைத்தியம் பிடிக்கிறது.

87............................................................

மழையோடு வந்த
குளிர்காற்றை வரவேற்று
சோபாவில் அமரவைத்து
தேனீர் கொடுத்தேன்.

88............................................................

இலை நுனியின்
வெறுமையைச் சுவைத்தபோது
ஒரு
பெருநகரம் காத்திருந்தது.

89............................................................

.
வாழ்க்கையும்
ஐபிஎல் போலத்தான்.
ஒருகட்டம் வரைக்கும்தான்
லீக் போட்டிகள்
அப்புறம் நாக்-அவுட்தான்.

..................................................................

90

கண்ணாம்பூச்சி சுவாரஸ்யத்தில்

உள் நுழைந்தபோதுதான்
தெரிந்தது
எனக்குள்
யார்யாரோ ஒளிந்திருப்பது.
...........................................................................
91

பதாகைகள் போல
கொட்டிவைத்திருக்கிறேன்
கொடாங்குச்சிகளை .
...............................................................................................
92

ரயிலில் பயணிக்கையில்
அழைபேசியில் அழைத்து
அப்போதுதான் எழுதியிருந்த
கவிதையினைப் படித்துக்காட்டினான்
நண்பன் .
தலைப்பு
'
கண்ணாடி ஆப்பிள்'.
எழுதியவன் குரலிலேயே
அலாதியாய்ச் சுவைத்தது அவ்வாப்பிள்.
கவிதை முடிந்து
நன்றி சொல்லி
அழைப்பு நிறவுற்ற கணத்தில்
மேலடுக்கில் பத்திரப்படுத்தியிருந்த
பைக்குள்ளிருந்து
அம்மா கொடுத்தனுப்பிய
ஒற்றை ஆப்பிள்
எண்ணங்களில் உருளத்துவங்கிற்று.
தொடவோ
தின்னவோ முடியாமல்
கனவுகள் பளபளத்தபடி

................................................................................

தினம் ஒரு
பெரியார் வாசகம் எழுதும்
ஆட்டோஸ்டேண்ட் கம்பலகைக்கு
அருகாமைத் தார்ச்சாலையில்
வரையப்பட்டிருந்த
அனுமார் படத்தில்
பக்தியும் பயமும்
சில்லறைகளாய்
சிதறிக்கிடக்கும் .
பெரியாரையும் வியப்போம்
அனுமாருக்கும் பயப்போம்
ஜெய்ஹனுமான் வெங்காயம்.

.........................................................................................

94

வெண்சாமரங்கள்
விடுமுறையிலிருக்கின்றன
நிமிர்த்திவைக்கப்பட்டிருக்கிறது
துடைப்பம்
மந்திரிகள் முணுமுணுப்பது
அரசருக்குக் கேட்காமலா இருக்கும்?

...................................................................................................

95

தனிமையின் சரல்கற்கள்
என் நதியெங்கும்
விரவிக்கிடக்கின்றன
உருட்டிப்பார்த்து
கன்னத்தில் வைத்துக்கொள்ள
ஒரு பிஞ்சுக்கையேனும்
வராமலா போகும்?

...............................................................................

96.

மகிழ்ச்சியின் உச்சத்தையும்
வெறுமையின் நிச்சலனத்தையும்
கடக்க முயன்று
பின்
கவிதையெழுதிக்கிடக்கிறேன் .

......................................................................................

97.

தெரிந்த
எல்லாக் கதைகளையும்
மறந்துவிட்டு
சொல்லத்துவங்குங்கள்
குழந்தைகளுக்கு
இனியும் ஒரு கதையை.

...........................................................................................

98.

வாழ்நாள் முழுக்க
தான்
சேர்த்துவைத்திருந்த
அனுபவங்களையெல்லாம்
காற்றில்
எழுதியே
காணாமல் போனது
ஒற்றை இறகு.

..........................................................................

99.

பிரபஞ்சகானம் குறித்த
சிறுகுறிப்பு வரைந்தபடி
யாரும் என்னை
நகர்த்த முடியாமல்
கட்டுண்டு கிடக்கிறேன்
நிலத்தோடு .

மற்றுமொரு கனவோடு
வழிந்தேகும்
என் ரத்தத்துளிகள்
நீர்மையற்றதாயிருக்கிறது .

உயரப்பறத்தல்
குறித்தேதும்
யோசிக்க முடியாமல்
காலத்தின்
பேப்பர் வெய்ட்டொன்று
என்மீது வைக்கப்பட்டிருக்கிறது.

பொழுதுகள் மாயம்
புலன்கள் காயம்
மயக்கம் தெய்வீகம்
கண்சொருகல் ஆலிங்கனம்
எனினும்
வளர்ந்துறுத்தும்
தாடி தவிர
வேரென்ன கொண்டேன்
இக்கணம் ?
மேலும்
ஒற்றை லுங்கி போதுமா
இச்சிறுவுடல்
போர்த்திவைக்க ?
க்யா மெஹமூபா...!...

...........................................................................

100.

ஒரு சேரகூவிக் களிக்கும்
குயில்கள் அறியுமா
அலைக்கழியும்
என்
சொற்கள் பற்றி?.

..........................................................................

101.

உயிரற்றிருப்பதை
உணர முடிகிறது
உயிரோடிருக்கயிலேயே .

..............................................................................

102.

மரண அஞ்சலிக்காக
வரிசையில்
நிற்பதைப்போலக் காத்திருக்கும்
அத்தனை பேரின் நேரத்தையும்
குறிப்பாய் என் நேரத்தையும்
அலட்சியமாய் வீணடிக்கும்
அந்த வங்கி ஊழியரை
எட்டி உதைத்தால்
என்ன தண்டனை கொடுப்பார்கள்?
என்று நான் எழுதுவதை
நீங்கள் ஆட்சேபிப்பவராக இருந்தால்
அருகிலுள்ள
அரசுடமையாக்கப்பட்ட வங்கிக்கு
உடன் சென்று பாருங்கள்
நான் செய்ய நினைத்ததை
நீங்களும் செய்ய நினைக்கலாம்
அல்லது செய்து முடிக்கலாம்

.........................................................................

103.

விதவிதமாய் வெளிப்படும்
அம்மாவின் திட்டுக்களைப் போலிருந்தது
நகரப் பேருந்தின்
ஹாரன் சப்தம்.
அடுத்த வாரம்
ஊருக்குப் போகவேண்டும்.

..............................................................................

104.

மழை போலவே தான்
இருக்கிறது
மழை பற்றிய தகவலும்.

.........................................................

105.

வெளியை பிரவேசிக்க
ஆசைப்பட்டு
இருந்த வானத்தை
தொலைத்தவன் நான்.

..................................................

106.

வாட்டர் ஃபில்டரிலிருந்து கசிந்த
ஒரு சொட்டு
தண்ணீரின் கணம்
நெஞ்சுக்குள் விழுந்து
கொண்டுவந்து கொடுத்தது
நாய்கள் எதுவும் குரைக்காத
ஒரு நிசியை.

............................................................................

107.

கனவில் வந்த
நிறமற்ற ரயில்
சத்தம் போடாமலேயே
என் மீது
ஏறிப்போனது.
பின்னொரு
கனவில் வந்த
வானத்தில்
நிறைய நிலாக்கள் இருந்தன.

....................................................

108.

ப்ரவீணாக்குட்டியிடம்
கதையொன்று
சொல்லச்சொல்லிக் கேட்டேன்.
எதிர்கேள்விகள் கேட்கக்கூடாதென்ற
நிபந்தனையோடு
குள்ள மனிதர்கள் பற்றி
அவள் சொன்ன
கதையில் வந்த
ராட்சசனை விடவும்
பெரியது
அவளிடம் கதைகேட்ட
என் மகிழ்ச்சி.

.....................................................................

109.

இந்தமுறை
கிராமத்துக்குப் போனபோது
பெரியாத்தாவிடமிருந்து
ஊதாங்குழலை வாங்கி
முயற்சித்த போது
ஹூக்கா பற்றி
ஞாபகம் வரவேயில்லை.

........................................................................

110.

சுத்தமாயிருந்த கோவில் வாசலை
மேலும் மேலும் பெருக்கி
சுத்தம் செய்துகொண்டிருந்தாள்
ஒரு பைத்தியம்.

அப்போதுதான்

பஞ்சுமிட்டாய் கேட்டு
கதறியழுத குழந்தையை
தரதரவென
இழுத்துச்செல்கிறாள் ஒருத்தி.

சில அழுக்குகள்
மழை நீரில் துடைத்தால்தான்
போகின்றன.

...................................................................

111.

ஒவ்வொருமுறையும்
ஒவ்வொரு கலரில்
டீ போட்டுத்தரும்
எங்கள் தெரு
டீக்கடை மாஸ்டருக்கு
வால்ட் டிஸ்னி என்று
பெயர் வைத்திருக்கிறேன்.

..........................................................................

112.

இசைப்பிரவாகத்திற்கு
முந்தைய
இசைக்கலைஞனின்
வாத்தியப் பயிற்சிக் குறிப்புகளாய்
துவங்கிற்று
பெருமழைக்கு முந்தைய
சிறுதூறல்.

.................................................................

113.

பிரவாகமெடுக்கும்
கீபோர்டின் இசையைப்போல
ஒரு கவிதை
எழுதவேண்டும் போலிருக்கிறது.

.....................................................................

114.

ஈசலைப் பிடிக்க
காத்திருக்கும் பல்லியை
உற்றுப் பார்த்தேன்.
கொஞ்ச நேரம்
அதுவும் என்னை
உற்றுப்பார்த்தது.

.......................................................

115.

மின்னலில் ஒளிரும்
மதிற்சுவர் கண்ணாடிகள்
அறிந்திருக்குமா
தன்
இடம் பொருள் காரணத்தை?

....................................................................................

116.
வண்ணதாசன் கடிதங்கள்
தொகுப்பை
கட்டியணைத்தபடியே
தூங்கிப்போனவன்
விழித்துப்பார்த்த போது
நெளிந்த ''வைப் போலிருந்தது
தூங்கும் அறையின்
குட்டிக் குண்டுபல்பின்
டங்ஸ்ட்டன் கோடுகள்.

.......................................................................................

117.

ஒரு தேர்ந்த
மாயவித்தைக்காரனிடம் சென்று
என்னையொரு
சிறுபெண்ணாக்கிடவேண்டினேன்
அப்படியே செய்தான்
கொஞ்சநாள் கழித்து
ஒரு பறவையாக்கிடென்றேன்
அதையும் செய்தான்.
பின்னொருநாளில்
என்னை
மேகமாக்கச் சொன்னேன்
மறுப்பேதும் சொல்லாமல்
செய்தான்.
கடைசியாய்
நிலைகொள்ளாமல் அலையுமென்
எண்ணங்களை
மாற்றிடச் சொன்னேன்.
அவன்தன் மந்திரக்கோலை
என்னிடம் கொடுத்துவிட்டு
மண்டியிட்டு நின்றான்.
நான் என்
உலகக்கவிதைக்கான
முதல் எழுத்தை
எழுதத்துவங்கினேன்.
ஒரு புன்னகையை
பிள்ளையார்சுழி போல
போட்டு.

........................................................................................................

118.

பொய்ப்பூசை செய்தவனும்
வரம் பெற்றான்
மனங்களுக்குள்
Random Visit -
செய்த கடவுள்.
....................................................................
119.

திருமண அழைப்பிதழை
மருத்துவருக்குக்க் கொடுக்கக் காத்திருந்தேன்
"
இரண்டு நீடில் வாங்கிக்கொள்ளுங்கள்"
என்றுசொல்லிப்போனாள் நர்ஸ்.
.............................................................................
120.

ஒரு உண்மயைச் சொல்கிறேன்
நம்புவது உங்கள் விருப்பம்
பாதிக்கு மேல்
உண்மையில்லையென்றால்
வட்டம் சதுரமாகிவிடும்.
......................................................................
121.

சொல்லவே முடியாத
உணர்வுகளோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்

வெகுநேரமாய்

அடித்தொண்டையில் மிதந்துகொண்டிருக்கும்
இந்த
மசாலா டீயின் காரத்தைப் போல.
...................................................................................
121.

யாருக்கும் தெரியாமல்

ஒளித்துவைத்துவிட்டு
தூங்கப்போனேன்
விடிந்ததும் எழுந்துபார்க்கையில்
அது எல்லோர் கைகளிலும் இருந்தது.
....................................................................................